துலாம் ராசிக்கு அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக்கும் பரிகாரங்கள்!

அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக்கும் பரிகாரங்கள்! 

துலாம்

துலா ராசியின் சிந்தனை, யோசனைக்குரியவர் சனி. ராசி கும்பம். இவர்களின் யோசனை அனேகமாக வீடு, வாசல், சொத்து சுகம் மற்றும் கல்வி என இதுபற்றியதாக அமையும். இவர்களின் யோசனை உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். வெளியே தெரியாது.

இந்த யோசனைகளை நிறைவேற்றுபவர் சூரியன். ராசி சிம்மம். இதிலொரு வேடிக்கை உள்ளது. துலா ராசியினருக்கு சிந்தனாதிபதிக்கும் நிறைவேற்றும் அதிபதிக்கும் ஒருவருக்கொருவர் ஆகாது. ஸ்டண்ட்தான். என்னத்தைச் சொல்ல? இவர்கள் ஒன்று நினைத்தால் அது நிறைவேறும்தான். ஆனால் நினைத்த வழியில் அல்லாது வேறுவிதமாக நிறைவேறும். அமைதியாக நினைத்து, ஆர்ப்பாட்டமாக நிறைவேற்றுவர். சிலசமயம் நினைப்பிற்கும், நிறைவேறுவதற்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்துவிடும். குழம்பிப் போய்விடுவர்.

லட்சியத்தை நிறைவேற்றும் சூரியன் ஆட்சியாக இருந்தால், வெகு கம்பீரமாக நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

சூரியன் உச்சமாக இருந்தால், இவர்களின் லட்சியம் நிறைவேற வாழ்க்கைத் துணை பெரும் உதவி செய்வார். இதன்மூலம் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னும் கணவர் இருக்கிறார் என்றோ, ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின் அவரது மனைவி இருக்கிறார் என்றோ பேட்டி கொடுத்து மகிழ்வர்.

இதே சூரியன் நீசமாகிவிட்டால் லட்சியம் நிறைவேறத் தடை செய்பவரே இவர்களாகத்தான் இருப்பார்கள். வேறுயாரும் அதற்குக் காரணம் கிடையாது. இவ்வாறு சூரியன் நீசமாகும்போது, துலா ராசியினருக்கு நல்ல வீடோ, மனையோ, வாகனமோ அடைய நினைத்த எண்ணம் நிறைவேறாது. வீடு வாங்கவேண்டுமென நினைத்து, அதனை ஒரு லட்சியமாகவே சிலர் கொண்டிருப்பர். ஆனால் அது நிறைவேறாமல் தட்டிக்கொண்டே போகும். சிலருக்கு கல்விப்பயிற்சி சம்பந்த லட்சியங்களும், பரம்பரைச் சொத்துகள் சம்பந்தமான எண்ணங்களும், அதை நிறைவேற்றும் வழிகளும் சிந்தனையில் இருந்துகொண்டே இருக்கும்.

துலா ராசியின் லட்சியத்தை நிறைவேற்றும் சூரியன் நீசமானால், இவர்கள் கண்டிப்பாக ஞாயிற்று கிழமைதோறும் விரதமிருந்து சூரியனையும், சிவனையும் வணங்கவேண்டும். முடிந்தமட்டும் கோவில்களில் விளக்கேற்றுங்கள். மின்சார உபகாரம் செய்யவும். கோதுமை தானம் நன்று. முக்கியமாக சிவன் கோவிலில் உழவாரப்பணி, விளக்கேற்றுவது என எவ்வளவு தூரம் பிரார்த்தனை செய்கிறார்களோ, அவ்வளவு நல்லது நடக்கும். லட்சியங்களும் நன்கு பலிதமாகும்.

துலா ராசியினரில் சூரியன் நீசமாகவுள்ள ஜாதகர்கள், தஞ்சாவூர் அருகேயுள்ள சூரியனார்கோவில், திருக்கண்டியூர் வீரட்டானம் போன்ற தல தரிசனம் செய்து, அங்குள்ள சிவனை வழிபடுதல் நன்று.

தந்தை மற்றும் தந்தை வயதுடைய பெரியவர்களை நன்கு கவனிக்கவும். சூரியன் நீசம் என்பது, ஒளி மறைவுக்கு ஒப்பானது. எனவே, பார்வைக் குறைபாடுள்ளவர்கள், பார்வையற்றவர்கள், கண் ஆபரேஷன் செய்யப்போகும் மனிதர்கள், கண் மருத்துவமனை என உங்கள் உதவிகள் கண் பார்வை சம்பந்தமானதாக இருக்கட்டும். உங்கள் உதவியால் அவர்கள்

பார்வையில் ஒளிபெறும்போது, உங்கள் வாழ்க்கை வெளிச்சமாகும்.

ஆர்.. மகாலட்சுமி

Comments